தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் தனது வளைகுடா நாடுகளின் பயணத்தின் முதல் கட்டமாக சவூதி அரேபியாவிற்கு வருகை புரிந்தார். கடந்த ஆகஸ்ட் 21 அதிகாலை ஜித்தா விமான நிலையத்தில் தமுமுக ஜித்தா மண்டலத் தலைவர் புதுமடம் இப்றாஹீம் தலைமையில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 22 அன்று மாலை ஜித்தா அழைப்பு மையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் இஸ்லாமிய மாநாட்டில் தமுமுக தலைவர் சிறப்புரையாற்றினார். பழைய மக்கா சாலையில் உள்ள ஷேக் பின் பாஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு மவ்லவி ஏ. அப்துல் மஜீத் ஸஹ்வி (இலங்கை) தலைமை தாங்கினார். ஹை அஸ்ஸலமா இஸ்லாமிய அழைப்பகத்தின் நிர்வாகி ஷேக் முஹம்மது மஹ்தி அஸ்ஸுப்ஹி முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இலங்கை மவ்லவி கே. எல். எம். இப்றாஹீம் மதனி, தொழுகையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். ஷாராஃ ஸப்யீன் இஸ்லாமிய அழைப்பகத்தின் நிர்வாகி ஷேக் ஹமூத் அஷ்ஷமீம்ரி வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் கடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற பீஸ் மாநாட்டில் தான் பங்கு கொண்டதை நினைவு கூர்ந்து, அந்த மாநாடு நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை வரவேற்கவே தான் இந்த மாநாட்டில் பங்கு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அவரது அரபி உரையை மவ்லவி எம். முஜிபுர் ரஹ்மான் உமரி தமிழாக்கம் செய்தார். தமுமுக தம்மாம் மண்டலத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் அறிமுக உரையாற்றினார்.

நிறைவாகத் தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடல் கடந்த வாழ்க்கை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் வரலாற்று நெடுகக் கடல் கடந்து முஸ்லிம்கள் வணிகத்திற்காகப் பல்வேறு நாடுகளுக்கு சென்றாலும், கூடவே தாங்கள் ஏற்றுக் கொண்ட மார்க்கமான இஸ்லாத்தை பிற மக்களுக்குத் தங்கள் சொல்லால் செயலால் எடுத்துரைத்ததை சுட்டிக் காட்டினார். தமிழகம் மற்றும் இலங்கைக்கு வந்த அரபக வணிகர்கள் இஸ்லாத்தை இங்கு வாழ்ந்த மக்களுக்கு எடுத்துரைத்ததையும், சென்னையில் பழவேற்காடு தொடங்கிக் குமரி முனையில் குளச்சல் வரை இஸ்லாம் பரவிய வரலாற்றையும் அவர் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் இஸ்லாத்தை தழுவிய மக்கள் மலேசியா, சுமத்தரா போன்ற கிழக்காசிய நாடுகளுக்கு வியாபாரிகளாகச் சென்ற போதும் அந்த நாடுகளில் இஸ்லாத்தை பரப்புவதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளை விவரித்தார். மலேசியா, சுமத்ரா தீவுகளில் தமிழகம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரிகளின் அழைப்புப் பணியின் காரணமாகவே இஸ்லாம் பரவிய வரலாற்றையும் அதற்கான சான்றுகளையும் தனது உரையில் தமுமுக தலைவர் விளக்கினார்.

தற்போது தாய்நாட்டை விட்டுக் கடல் கடந்து வந்து சவூதி அரேபியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை கற்பதற்கும் அதனைச் செயற்படுத்துவதற்கும் உள்ள வாய்ப்புகளை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். பன்னாட்டைச் சேர்ந்த மக்களுடன் பழகும் வாய்ப்பு சவூதியில் இருக்கின்றது என்றும் இதனைத்தொழிலுக்காகக் கடல் கடந்து வந்த போதினும் தமிழகச் சகோதரர்கள் கடந்த காலத்தில் கடல்கடந்த தமிழக வியாபாரிகள் செய்தது போல் மார்க்கத்தைப் பிறருக்கு எடுத்துரைக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பெரும் திரளாக மக்கள் இந்த மாநாட்டில் பங்கு கொண்டார்கள். தமுமுக ஜித்தா மண்டலம், தமிழ் தஃவா குழு, ஜித்தா, இஸ்லாமிய அழைப்பகம், ஹை அஸ்ஸலாமா. இஸ்லாமிய அழைப்பகம் ஷாராஃ ஸப்யீன் ஆகியவற்றைச் சேர்ந்த சகோதரர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

0 comments: